×

நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் தொடர்ந்து 5வது நாளாக மர்மம் நீடித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்எல்ஏ ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திசையன்விளை, கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60). கடந்த 2ம் தேதி மாயமானார். இந்நிலையில் 4ம் தேதி அதே பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் கேபிகே ஜெயக்குமார் தனசிங் உடலை எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர்.

மரண வாக்குமூலம் என்ற பெயரில் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நபர்கள், அவரிடம் கடன் வாங்கிய நபர்கள் என அனைவரையும் தனிப்படை போலீசார் தனித்தனியே சந்தித்து, விசாரித்து வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் கூறிய ஒரு நபர் தலைமறைவானதாக கூறப்பட்டது. அவரும் காவல்நிலையத்தில் ஆஜராகி, தான் இங்குதான் இருப்பதாகவும், பலர் தனது செல்போனில் தொடர்பு கொண்டு கொலை குறித்து விசாரிப்பதால், செல்போனை மட்டும் சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் போலீசார் ஏற்கனவே ஜெயக்குமார் தனசிங்கின் உறவினரான நாகர்கோவில் அரசு மருத்துவர் செல்வகுமார், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணை வீடியோவிலும் பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக 36 பேருக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் பெயரும், ஜெயக்குமாரின் கடிதத்தில் இடம் பெற்றிருப்பதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பிருந்தார்.

அதன்படி, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், அங்கிருந்து நெல்லையில் தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு நேரில் வந்த தனிப்படை போலீசார் எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை தங்கபாலுவிடம் பெற்றனர். பின்னர் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், தங்கபாலு தங்கியிருந்த அறைக்கு சென்று வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டார். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

அதில் மறைந்த ஜெயக்குமாரிடம் தான் பணம் எதுவும் வாங்கவில்லை என தங்கபாலு ஆணித்தரமாக எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.  இதேபோல தூத்துக்குடி மாவட்டம், பூச்சிக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் உட்பட 9 பேரிடம் எஸ்பி சிலம்பரசன் தலைமையிலான போலீசார் நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 9 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் ரூபி மனோகரனிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை எழுத்துப்பூர்வமாக போலீசார் பெற்றுக் கொண்டனர்.

ஜெயக்குமார் வழக்கு தொடர்பாக போலீசார் 36 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையிலும், 5 நாட்களாகியும் ஜெயக்குமார் மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னமும் விலகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 10 தனிப்படைகள் விசாரித்து வருகின்றன.

* ஜெயக்குமாரிடம் பணம் பெற்றேனா? கே.வி.தங்கபாலு விளக்கம்
நெல்லை வண்ணார்பேட்டையில் போலீசார் விசாரணைக்காக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கேவி தங்கபாலு நேற்று ஆஜராகினார். பின்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டி: மறைந்த மாவட்ட தலைவர் ஜெயக்குமாரிடமிருந்து நான் பணம் எதுவும் பெறவில்லை. பணம் வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கும் இல்லை. அந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. ஜெயக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் என்னை பற்றிய தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்பதை உறுதிபட கூறிக் கொள்கிறேன்.

மறைந்த காங்., மாவட்ட தலைவர் ஜெயக்குமாருக்கு முதன் முதலில் பதவி கொடுத்ததே நான் தான். எனக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தார் என அவரே சிலமுறை என்னிடம் தெரிவித்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக போலீசார் முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை விசாரணை முடியும் வரை பொறுமையாக காத்திருங்கள்.

காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை அளித்துள்ளேன். தமிழக அரசியலில் 54 ஆண்டுகளை கடந்து நான் வந்திருக்கிறேன். இதுவரை யாரும் என்னிடத்தில் பணம் கொடுத்ததாகவும், நான் வாங்கி கொண்டதாகவும் எந்த குற்றச்சாட்டும் என்மீது இல்லை. மீண்டும் விசாரணைக்கு அழைப்பது தொடர்பாக அவர்கள் என்னிடம் எதுவும் கூறவில்லை. எப்போது விசாரணை என்றாலும் முழு ஒத்துழைப்பை தருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* கடிதத்தில் கூறியது உண்மையில்லை ரூபி மனோகரன் மறுப்பு
விசாரணைக்கு பின்னர் ரூபி மனோகரன் எம்எல்ஏ கூறுகையில், ‘ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக இருந்தார். நான் நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ. காங்கிரஸ் கட்சியில் இருவரும் இணைந்து செயல்பட்டோம். ஆனால் அவர் கடிதத்தில் கூறியுள்ளதில் எதுவும் உண்மையில்லை. அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி எந்த பணமும் நான் அவருக்கு தர வேண்டியது இல்லை. இதை போலீசாரிடம் தெளிவாக தெரிவித்துள்ளேன்’ என்றார்.

* முக்கிய தடயம் சிக்கியது
இறந்து கிடந்த ஜெயக்குமாரின் தொண்டையில் பாத்திரம் துலக்கும் ‘இரும்பு ஸ்கிரப்பரின் துகள்’ இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஜெயக்குமாரை கொலை செய்யும் முன்பு அவர் சத்தம் போடாமல் இருக்க ஸ்கிரப்பரை வாய்க்குள் திணித்திருக்கலாம் எனவும், இது திட்டமிட்ட கொலை தான் என்ற முடிவுக்கும் போலீசார் வந்துள்ளனர். அந்த ஸ்கிரப்பரின் கவர் அந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே அதில் பதிவாகியுள்ள கைரேகைகள் யாருடன் ஒத்துப் போகிறது என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

* மகனுக்கு டிஎன்ஏ பரிசோதனை
தீயில் கருகிய உடல் ஜெயக்குமார் தானா என்பதை எப்படி உறுதி செய்ய வேண்டுமென அவரது மனைவி ஜெயந்தி போலீஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து அவரது மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று டிஎன்ஏ பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனையின் முடிவு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.

* இருவர் மீது சந்தேகம்
ஜெயக்குமார் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரின் முகத்தை மூடி சுவாசத்தை நிறுத்தி அவரை மர்ம நபர்கள் கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரின் கைகள், கால்கள், இடுப்பு மற்றும் முகத்தையும் சேர்த்து ஒரு நீண்ட பலகையில் வைத்து இரும்பு கம்பியால் இறுக்கி கட்டிய கொலையாளிகள் அவரது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள தோட்டத்தில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பிணத்தை எரித்த துர்நாற்றம் அருகில் உள்ளவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது? என போலீசிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கொலையை அவருக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் செய்திருக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் விரைவில் குற்றவாளிகளை கண்டறிந்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

* கடிதங்களில் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்துதான்
நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கும் மற்றும் தனது மருமகனுக்கும், குடும்பத்தினருக்கும் என 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியுள்ளார். முதல் கடிதத்தில் 10 நபர்களை தொடர்பு படுத்தியிருந்தார். 2ம் கடிதத்தில் 26 நபர்களை தொடர்பு படுத்தியிருந்தார். மொத்தமாக 36 நபர்களின் பெயர்கள் இரு கடிதங்களிலும் இடம் பெற்றுள்ளன. கடிதங்கள் இரண்டையும் ஆய்வு செய்த தடய அறிவியல் ஆய்வகத்தினர், இரண்டிலும் அவர் கையெழுத்து இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.

* விஸ்ரா பரிசோதனை
நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின் போது தடயவியல் நிபுணர்கள், ஜெயக்குமாரின் உடலில் எரிந்ததுபோக எஞ்சியிருந்த கல்லீரல், இரைப்பை, நுரையீரல், உணவு குழாய், சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உடல் பாகங்களில் சிலவற்றை சேகரித்து நெல்லை கோர்ட் அருகேயுள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு ‘விஸ்ரா’ எனப்படும் உடல்பாக ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் ஆய்வு முடிவுகள் விரைவில் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* காங்கிரசார் கலக்கம்
கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணத்தின் பின்னணியில், அவர் எழுதிய கடிதங்கள், கட்சியில் நிலவிய பணப்புழக்கத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செலவிற்கே பணமின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகின. மாநில தலைவரும் அதை உறுதி செய்யும் வகையில் தேர்தலுக்கு முன்னர் பேட்டி அளித்திருந்தார். ஆனால் கட்சியினரிடம் லட்சக்கணக்கில் பணப்புழக்கமும், அதனோடு வட்டி பிசினசும் கொடிக்கட்டிப் பறந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடன் பெறுவதற்கு தங்கள் கட்சியினரையே பகடைக்காயாக பயன்படுத்தியிருப்பது போலீசார் விசாரணையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் சில நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

* உயிரிழந்த பின் எரிக்கப்பட்டாரா?
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முதற்கட்ட அறிக்கை ஏற்கனவே நெல்லை எஸ்.பி.யிடம் அளிக்கப்பட்டுவிட்டது. அதில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்து போய் இருப்பதும், அவரது நுரையீரலில் எவ்வித திரவங்களும் இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயிரிழந்த நபரை எரித்தால் மட்டுமே, குரல்வளை முற்றிலும் எரிந்து போவதோடு, நுரையீரலில் திரவங்கள் இருக்காது என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.

இதனால் ஜெயக்குமார் உயிரிழந்த பின்னர், தோட்டத்தில் எரிக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது. அவர் தற்கொலை செய்யவில்லை என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ள நிலையில், கொலைக்கான முகாந்திரம் இன்னமும் பிடிபடாமல் உள்ளது. உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள், சென்னையில் உள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவிற்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் கருத்துக்கேற்ப, உடற்கூறு ஆய்வில் ஒரு முடிவுக்கு வர முடியும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

The post நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம் appeared first on Dinakaran.

Tags : Nellie District Congress ,Lalam Thangabalu ,Ruby Manokaran ,Nellai ,Nellai East District Congress ,President ,KPK ,Jayakumar ,Congress ,Thangabalu ,MLA ,Nellai District Congress ,Thanagabalu ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த...